ஜோர்தானில் மோடிக்கு மிக உயரிய இராஜதந்திர மரியாதை
ஜோர்தான் நாட்டுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டு அரச குடும்பத்தினர் மிக உயரிய இராஜதந்திர மரியாதையை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக, தலைநகர் அம்மான் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தைப் பார்வையிடச் சென்ற பிரதமரை, ஜோர்டான் பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா II தனது BMW காரில் தானே அமர்ந்து ஓட்டிச் சென்றார்.
நட்புறவின் உச்சகட்டம்
பிரதமரைத் தனது காரின் முன் இருக்கையில் அமர வைத்து இளவரசர் அழைத்துச் சென்ற இந்த நெகிழ்ச்சியான புகைப்படம் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் உச்சகட்டம் எனவும் பாராட்டப்பட்டு வருகிறது.

இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா II, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் ராணி, ரானியா ஆகியோரின் மூத்த மகனாவார்.
இவர், அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்ததுடன், பிரித்தானியாவின் புகழ்பெற்ற சாண்ட்ஹர்ஸ்ட் இராணுவக் கல்லூரியிலும் பயிற்சி பெற்றவர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் போது, இந்தியா மற்றும் ஜோர்தான் இடையிலான பண்டைய வர்த்தகத் தொடர்புகளை மீண்டும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் மோடி வலியுறுத்தினார். தற்போது ஜோர்தானின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.