இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையின் ஆடை ஏற்றுமதி பாரிய சவால்களை எதிர்கொள்ளும் அபாயத்திற்குள்ளாகியுள்ளதென ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் கையெழுத்தாகவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வருடாந்த ஆடை ஏற்றுமதி வருமானமான 5 பில்லியன் டொலர்களில் சுமார் 30 சதவீத பங்கு ஐரோப்பிய நாடுகளுக்கே கிடைக்கின்றது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி
இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 0 சதவீத வரிச்சலுகை வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கு GSP+ சலுகை இருந்தபோதிலும், ஐரோப்பாவிற்கு ஆடை ஏற்றுமதி செய்யும் போது இன்னமும் சில வரிகள் அறவிடப்படுவதால் இந்தியாவிற்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது.
2025 ஆம் ஆண்டில் இலங்கை 5,300 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
பொருட்களுக்கு வரி
அதில் பெரும் பகுதி ஐரோப்பிய ஒன்றியத்திற்கே சென்றுள்ளது. பிரித்தானியாவின் வளரும் நாடுகளின் வர்த்தக திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வரிச்சலுகை கிடைத்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா இணையும் போது இலங்கையின் போட்டித்தன்மை குறையும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளதால், இந்தியா இந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்த ஒப்பந்தத்தை துரிதமாக முடிக்க ஆர்வம் காட்டுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் 99 சதவீதம் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படவுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.