கிளிநொச்சி விவசாயிகள் அரசாங்க அதிபருக்கு வைத்துள்ள கோரிக்கை(Photos)
புதிய இணைப்பு
விவசாயிகளின் மனநிலைகளை அறிந்து செயற்படாவிட்டால் எமக்கும் வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிற்கு ஒதுக்கப்பட்ட விவசாய உரம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து திரும்புகையில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“கிளிநொச்சி மாவட்டத்திற்கு 40 அந்தர் விவசாய உரம் அனுப்பபப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம்(12) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
அந்த வேளையில், அரசாங்க அதிபர் எமது ஆட்சேபனைகளை செவிமெடுத்ததுடன் இந்த விடயம் தொடர்பில் கொழும்பு உரச்செயலகத்துடன் தொடர்புகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
புறக்கணிப்பு
மிக விரைவாக உரத்தேவையுடன் உள்ள விவசாயிகளை இனங்கண்டு அவர்களின் விபரத்தை அனுப்பி உரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஆணையிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் இந்த மாவட்டத்தில் 28 ஆயிரத்துக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் கிடைக்காமையினால் ஏற்பட்ட காலதாமத விதைப்பு தொடர்பில் மாவட்டத்தில் உள்ள விவசாயத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளிற்கும் நன்கு தெரியும்.
ஆனால் இந்த விபரங்களை கொழும்பிற்கு ஏன் இவர்கள் அனுப்பவில்லை என்ற மனவேதனை இன்னும் இருந்துகொண்டே இருக்கின்றது.
19 மாவட்டங்களிற்கு இந்த உரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இராமநாதபுரம் கமநல சேவைகள் திணைக்களம் மாத்திரம் 40 அந்தர் உரத்தினை கோரியிருக்கின்றார்கள்.
ஏனைய கமநல சேவைகள் நிலையங்கள் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. ஏன் இந்த தவறு நடந்தது என்பது மனதுக்கு வேதனையாக உள்ளது.
எச்சரிக்கை
மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்களிற்கு தெற்கில் என்ன நடந்தது என்ன என்பதை தெரிந்தும் கூட இங்குள்ள விவசாயிகளின் மன நிலையினை புரிந்துகொள்ளாத அதிகாரிகள் தொடர்பில் எமக்கும் வித்தியாசமான எண்ணங்களும் சிந்தனைகளும் தோன்றுகின்றது.
எனவே அரசாங்க அதிபரின் கருத்தினை நாங்கள் மதித்து, எதிர்வரும் வியாழக்கிழமை வரை காத்திருப்போம்.
இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி அதன் பின்னர் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை செய்யலாம் என்ற யோசனையில் நாங்கள் இருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி: யது
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
கிளிநொச்சி விவசாயிகள் தமக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் பசளை கிடைத்துள்ளமை தொடர்பிலேயே அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை இன்று காலை 10 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 40 அந்தர் உரம் மாத்திரமே கிடைத்துள்ளதோடு ஏனைய விவசாயிகள் உரம் இல்லாது தவித்துள்ளனர்.
அதனால் அவர்களிற்கான உரத்தினை பெற்றுக்கொடுக்க அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரிபொருள் பிரச்சினை காரணமாக இந்த வருடம் விதைப்புக்கான காலம் பிந்தியுள்ளது.
தற்பொழுது பசளைக்காக காத்திருக்கும் விவசாய நிலங்களிற்கு உரத்தினை பெற்று தருவதற்கு அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இதன்போது அரசாங்க அதிபர் விவசாயிகளுக்கு தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் “கமநல சேவைகள் திணைக்களத்தின் புள்ளி விபரத்திற்கு அமைவாகவே மாவட்டத்திற்கு இந்த உரம் கிடைத்துள்ளது.
நடவடிக்கை
காலம் பிந்தி விதைத்தாலும் தற்பொழுது 50 நாட்களிற்கு குறைவான பயிராக காணப்படும் வயல் நிலங்கள் தொடர்பில் கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக புள்ளி விபரத்தை விரைந்து தாருங்கள்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த திணைக்கள அதிகாரிகளிற்கும் குறிப்பிட்டுள்ளேன்.
அவர்களிற்கான உரத்தினை சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி பெற்று தருவதற்கு முயற்சி மேற்கொள்வேன்.
இந்த தொடர்பில் விவசாய அமைப்புக்கள், திணைக்களங்களுடனான சந்திப்பொன்றை எதிர்வரும் வியாழக்கிழமை ஏற்பாடு செய்துள்ளேன்.
அதில் இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



