இலங்கை வானில் வட்டமிட்ட துருக்கிய விமானம்.. அவசரமாக தரையிறக்க நடவடிக்கை
புதிய இணைப்பு
கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விமானம், தரையிறங்கும் கியரில் செயலிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்கத் தயாராக உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்தான்புல்லுக்குச் செல்லவிருந்த TK 733 விமானம், 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றி கொண்டு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார்நிலையில்
இதனை தொடர்ந்து, தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலுக்கு மேலே ஒரு முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பிலான அறிக்கை வெளியான நேரத்தில், விமானம் சிலாபம் பகுதிக்கு மேலே சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்துள்ளது.
மேலும், விமானம் இன்று நள்ளிரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தீயணைப்பு வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் ஓடுபாதையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
