நாட்டில் சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 10 வீதமானோர், அதாவது ஏறத்தாழ 22 இலட்சம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இறுதிக்கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை
கொழும்பு நடைபெற்ற இலங்கை சிறுநீரக நோய் நிபுணர்கள் சங்கத்தின் ஏழாவது வருடாந்த சர்வதேச மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம், இறுதிக்கட்ட சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையை 30 வீதத்தால் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டில் பதிவான நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 112,000 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் சுமார் 8,000 நோயாளிகள் இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வருவதுடன், இதற்காக அரசாங்கம் வருடந்தோறும் சுமார் 16.8 பில்லியன் ரூபாயைச் செலவிடுகிறது.
இதேவேளை, நாட்டின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டில் 241 ஆக இருந்த மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 557 ஆக இரட்டிப்புக்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.