அஸ்கிரிய பீடத்தில் லக்ஸ்மன் கிரியெல்லவின் கருத்து! நாட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி என்கிறார் கந்தசாமி பிரபு கண்டனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய அரசியல் பிரமுகர் லக்ஸ்மன் கிரியெல்ல அஸ்கிரிய பீடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சிறுபான்மையினம் தொடர்பில் தொடர்பில் தெரிவித்த கருத்துகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுடன், இவ்வாறான கருத்துகளை இந்த நாட்டில் மீண்டும் ஒரு கலவரத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே பார்ப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலப்பகுதியில் சட்டம் அனைவருக்கும் சமனான வகையிலேயே பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிக்குகளின் போராட்டத்தின் பின்னணியில் இருந்து செயல்படுபவர்கள் ராஜபக்சர்களோடு இணைந்தவர்களாகவும், அவர்களது நிதிப் பலத்தோடும், அவர்களது பின்னணியினோடும் செயல்படுபவர்களாகத்தான் காணக்கூடியதாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (17.10.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவருக்கும் சமமான சட்ட ஆட்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது இந்த நாட்டிலே இனவாதம் இல்லாத, மதவாதம் இல்லாத, ஒரு அனைவருக்கும் சமமான ஒரு சட்ட ஆட்சியை நாங்கள் இப்போது கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த இரண்டு வருட காலகட்டத்துக்குள்ளே இனங்களுக்கு இடையே, மதங்களுக்கு இடையே குழப்பங்களை தோற்றுவிப்பதற்கு எதிராக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கடந்த காலங்களிலே இந்த நாட்டை நிர்வகித்தவர்கள் இனவாதத்தையும், மதவாதத்தையும் கொண்டு, அதை ஒரு அரசியல் நோக்கோடு அதை வைத்துத்தான் தங்களுடைய அரசியலை முன்னெடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.
ஆனால், இப்போது இருக்கின்ற இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதத்துக்கு எதிரான ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கம் முற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மக்களிடத்தில் பேசுபொருளான ஆர்ப்பாட்டம்
இப்போது இந்த நாட்டிலே ஞானசார தேரரின் கைது தொடர்பாக சில பேரணிகளும், அதனைப் போன்று பல கருத்தாடல்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அது தொடர்பாக நேற்றைய தினம் கூட ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது; ஒரு பேரணியும் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்திலே கலந்து கொண்டவர்கள் தொடர்பாக மக்களிடத்திலே ஒரு பேசுபொருளாக இருக்கின்றது. அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் இனவாதத்தோடு ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள்தான் அந்த ஆர்ப்பாட்டத்திலே முன்முறையாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; பின்புலமாக இருந்து செயல்பட்டவர்களாகக் காணக்கூடியதாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்