உக்ரைன் அகதிகள் குறித்த கேள்விக்கு சிரித்து பதிலளித்து சர்ச்சையில் சிக்கியுள்ள கமலா ஹாரிஸ்
உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் விழுந்து விழுந்து சிரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஸ்ய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் மக்கள் போர் காரணமாக குழந்தைகளுடன் உக்ரைனில் இருந்து வெளியேறி போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதற்கமைய,உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வெளியேறியிருப்பதாக யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை போலந்து அதிபர் ஆன்ட்ரெஸஸ் டியூடா இன்று சந்தித்து பேசியுள்ளதுடன், இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
இதன்போது செய்தியாளர் ஒருவர், "உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுக்குமா?,"உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்துவீர்களா? என இரு நாட்டு அதிபரிடமும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன்போது போலந்து அதிபரை பார்த்த கமலா ஹாரீஸ், "நீங்களே முதலில் பதில் கூறுங்கள். ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்" எனக் கூறிவிட்டு சில நொடிகள் விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.
இந்த காணொளி சமூகவலைதளங்களில் வைரலாக சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன்,பலரும் தமது கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
உயிருக்கு பயந்து தங்கள் தாய் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் உக்ரைன் அகதிகள் குறித்த கேள்விக்கு, ஒரு நாட்டின் துணை அதிபர் சிரிப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் பலர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.