மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகள்! நாடாளுமன்றத்தில் கடும் கருத்து மோதல்
மலையக மக்களின் சம்பளம், காணி, வீடு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடும் கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி கூறுகையில், மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களது காலத்திலேயே இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
கடந்த கால அரசாங்கங்கள் குறித்து குற்றச்சாட்டு
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் பிரதிநிதிகளாகவும் அமைச்சர்களாகவும் செயற்பட்டவர்கள் என சுட்டிக்காட்டியதுடன், அவர்கள் தங்களது அரசாங்கங்களிடமும் நாடாளுமன்றத்திலும் முறையாக இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளை பெற்றிருந்தால் இன்று மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களே கடந்துள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை, வீடமைப்பு, காணி மற்றும் அன்றாட வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
மேலும் பெருந்தோட்டத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மலையக மக்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலையை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டிற்கு பதில்
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தாம் சுமார் ஒரு வருட காலமே அமைச்சராக பதவி வகித்ததாகவும் அந்த காலப்பகுதியில் மலையக மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.
தாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் தற்போதைய அமைச்சராக உள்ள வைத்தியர் மதுர செனரத் உள்ளிட்டவர்கள் நன்கு அறிந்திருப்பதாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு நேரடியான பதிலை வழங்குவதற்குப் பதிலாக கடந்த கால அரசாங்கங்கள் என்ன செய்தன என்ற கேள்வியே எழுப்பப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும் நுவரெலியா மாவட்டமே நாட்டில் அதிக வறுமை நிலை காணப்படும் மாவட்டம் என தெரிவிக்கப்படுவதாகவும், ஆனால் கிடைக்கப்பெறும் தரவுகளின்படி முல்லைத்தீவு மாவட்டமே முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.