விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களினால் 06 கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 3 தாக்குதல்கள் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே பதிவாகியுள்ளன. யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட கைக்குண்டுகளே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குற்றவியல் பின்னணி
இதன்காரணமாக, பாதாள உலகக் குற்றங்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படைகளின் உதவியைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில், தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் கதவை அடையாளம் தெரியாத நபர் தட்டியுள்ளார்.
வீட்டார் கதவைத் திறந்ததும் அந்நபர் கைக்குண்டை வீட்டிற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 வயதுடைய கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதுடைய சகோதரரான துமிந்த கீஹான் ஆகிய இரு சிறுவர்களும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

இச்சிறுவர்களின் தந்தையான 55 வயதுடைய நளின் துசாந்த பெரேரா என்பவரின் காலில் காயமேற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது எவ்வித குற்றவியல் பின்னணியோ குற்றச்சாட்டுகளோ இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் உறவினர்கள் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "படவிட்ட அசாங்க" என்ற பாதாள உலகக் கும்பல் தலைவனின் நெருங்கிய சகாக்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விசாரணைகள்
நேற்று முன்தினம் களுபோவில பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது படவிட்ட அசாங்கவின் சகாக்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், தாக்குதல் நடத்தியவர் இலக்கை மாற்றி, தவறுதலாக இச்சிறுவர்களின் வீட்டின் மீது குண்டை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.