பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
டுபாயில் நேற்று(11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
வெற்றி இலக்கு
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் தலைவி ஃபாத்திமா சனா ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து மற்றும் சாமுடி பிரபோதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இறுதிப் போட்டி
இலங்கை அணியின் வெற்றிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரம 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஃபாத்திமா சனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் மகளிர் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.