யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்த பெண்
யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற 21 வயது இளம்பெண் ஒருவர் வைத்திய நிபுணரால் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (16.06.2026) காலை சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளரின் மகளான இளம்பெண் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்தபோது, பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் அவரை இடைமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது பெற்றோரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பெண் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் திறப்பை மருத்துவர் எடுத்துச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், அப்பகுதியில் சென்ற ஒருவரின் கைபேசியை பயன்படுத்தி சம்பவத்தை தனது பெற்றோருக்கு அறிவித்துள்ளார்
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது தந்தை மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றதுடன், பின்னர் குடும்பத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சென்று சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, குறித்த மோட்டார் சைக்கிள் திறப்பை வைத்தியசாலை பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்க முயற்சிக்கப்பட்டதாகவும், அதனை ஏற்க மறுத்த பொலிஸ் பிரிவினர் வைத்தியசாலை பணிப்பாளர் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது மருத்துவருக்கும் வைத்தியசாலை பொலிஸ் பிரிவினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து, இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை பொலிஸ் பிரிவினர் தமது மேலதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

பொதுமக்களுடன் அடிக்கடி முரண்பாடு
குறித்த சிற்றுண்டிச்சாலை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயங்கி வருவதுடன், வைத்தியசாலை வளாகத்திற்குள் உணவுப் பொருட்களை கொண்டு வருவதற்கு முன் அனுமதி நிர்வாகத்திடமிருந்து பெற்றுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாலை வேளையிலும் சிற்றுண்டி வழங்கச் சென்ற உரிமையாளருடன் மீண்டும் முரண்பாடு ஏற்பட்டதாகவும், அதில் மற்றொரு வைத்திய நிபுணரும் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட வைத்தியர்களின் பதில் இதுவரை கிடைக்கவில்லை. சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிக்கொணருமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri