அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்
இலங்கை அரசின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து எந்த நீதியையும் பெற முடியாது என்ற தமிழ் சமூகத்தின் நீண்டகாலப் பார்வையினை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன என யாழ். பல்கலைக்கழக (Jaffna) ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வடக்குக் - கிழக்கில் இறுதிப் போர் நினைவேந்தல் மீதான அரச அடக்குமுறை குறித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் இன்று (16.05.2024) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையில்,
"இலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும், உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட கூட்டு வலி மற்றும் அதிர்ச்சியில் இருந்து தமிழ் மக்கள் இன்னமும் முழுமையாக மீளவில்லை.
நினைவேந்தல் நிகழ்வுகள்
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமையுடன் போர் முடிவுக்கு வந்தது. மேலும் ஆயிரக்கணக்கானோர் இந்தப் போரிலே காயமடைந்தனர். பலர் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. தமிழ் மக்கள் இந்த யுத்தத்தின் போது சந்தித்த பாரிய பொருள் இழப்பின் தாக்கமானது நீண்டகால விளைவுகளைக் கொண்டது.
உள்நாட்டுப் போரின் போது தாங்கள் சந்தித்த மனித, உடல் மற்றும் பொருள் ரீதியான இழப்புக்கள் குறித்து உண்மையையும், நீதியையும் தமிழ் மக்கள் இன்று கோரி நிற்கின்ற அதேவேளை, போரின் கடைசிக் கட்டங்களின் போது இலங்கை அரசாங்கம் செய்த அட்டூழியங்களை ஓர் இனவழிப்புச் செயன்முறை என அவர்கள் கருதுகிறார்கள்.
அதேவேளை, கடந்த பதினான்கு ஆண்டுகளில் நடந்ததைப் போலவே, இந்த ஆண்டிலும் மே மாதத்தில் வடக்கு - கிழக்கிலும் அதற்கு அப்பாலும் உள்ள தமிழர்கள் போரின் போது இறந்தவர்களை நினைவுகூர்கின்றனர். வடக்கு - கிழக்கு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் வன்முறையை நேரில் அனுபவித்தவர்கள் உள்ளடங்கலாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
போரில் இறந்த தங்கள் உறவுகளையும், இழப்புக்களைச் சந்தித்த பரந்துபட்ட தமிழ் சமூகத்தையும் நினைவுகூருவோரும் அனைவருடனும், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தோளோடு தோள் நின்று அவர்களுக்கு எமது ஆதரவினை வழங்குகிறோம்.
அவர்களின் துயரத்திலும் வேதனையிலும் நாமும் பங்கேற்கிறதானது நினைவுகூரல் செயன்முறைகள் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குணப்படுத்தலினை ஏற்படுத்துவதிலும், அவர்கள் வாழ்விலே அமைதியைக் கொண்டுவருவதிலும் பங்களிக்கக் கூடியனவாக இருக்கும்.
அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு எதிர்ப்பினையும், வன்முறைக்குப் பின்னான அம்மக்களின் மீளெழுச்சியினை வெளிப்படுத்தும் செயன்முறைகளாகவும் அமைகின்றன என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கருதுகிறது.
அடக்குமுறை
இதற்கமைய, இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் சட்ட நடைமுறையாக்க இயந்திரங்கள் இந்த வாரம் நடைபெற்று வரும் நினைவேந்தல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவது, அடக்குவது மற்றும் தடுப்பது குறித்துத் தனது ஆழ்ந்த கரிசனையினையும், கவலையினையும் ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையூடாக வெளிப்படுத்துகிறது.
மேலும், 2009ஆம் ஆண்டிலே முள்ளிவாய்க்கால் போரிலே அகப்பட்டிருந்த மக்களின் அனுபவங்களை நினைவுகூரும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரிலே முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் கைது செய்யப்பட்டமையை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தைப் பொலிஸார் தடுக்க முயன்றுள்ளனர். இறந்தவர்களின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம்களை நிறுத்துவதற்கான முயற்சிகளும் கூட இடம்பெற்றிருக்கின்றன.
மேலும், கல்முனைப் பகுதியில் நினைவேந்தற் செயன்முறைகளைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவினைப் பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த சம்பவங்களைத் தவிர, சமூகக் கூட்டிணைவுடன் முன்னெடுக்கப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், பயங்கரவாதத்திற்கும் புத்துயிர் அளிக்கும் முயற்சிகள் எனத் தவறாக சித்தரித்து, இழிவுபடுத்தும் கொடிய செயலிலும் அரசும் அதன் இயந்திரங்களும் ஈடுபட்டுள்ளன.
சம்பூர் கைது நடவடிக்கை
நினைவுகூரலினைத் தடுப்பதற்கான அரசின் இந்த முயற்சிகள் அனைத்தும் போரில் இறந்தவர்களை அர்த்தமுள்ள முறையில் நினைவுகூருவதற்கு இலங்கையில் தமிழர்களுக்கு இடமில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகின்றன.
அரசின் இவ்வாறான கடும்போக்கான நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் அரசின் இன விரோதத்தையும் வெளிக்காட்டுகின்றன.
பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்த இன ஒடுக்குமுறை மற்றும் இன வன்முறைக்கு இலங்கை அரசின் சட்ட மற்றும் நீதித்துறைக் கட்டமைப்புக்களிடம் இருந்து எந்த நீதியையும் பெற முடியாது என்ற தமிழ் சமூகத்தின் நீண்டகாலப் பார்வையினை இந்தச் சம்பவங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவனவாக அமைகின்றன.
மேலும், தமிழ் சமூகத்தின் நினைவேந்தல் முயற்சிகளை தவறாக சித்தரிக்கும் வகையிலும், அவற்றினை மட்டுப்படுத்தும் வகையிலும், அவற்றினைக் குற்றமாக மாற்றும் வகையிலும் அரச இயந்திரங்களினால் மேற்கொள்ளப்படும் எல்லா செயன்முறைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இலங்கையில் சட்ட நடைமுறைக்கு பொறுப்பான அனைத்துத் தரப்புக்களையும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோருகிறது.
இந்நிலையில், இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இன, மத வேறுபாடுகள் கடந்து நாட்டின் வடக்குக் கிழக்கிலே நினைவேந்தல் செயன்முறைகளினை நசுக்கும் வகையில் இடம்பெறும் அரச அடக்குமுறையை கண்டித்து, போரின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், இந்த வாரம் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொண்டிருப்போருக்கும் தங்கள் ஆதரவினை வழங்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அனுபவித்த வேதனை மற்றும் இழப்புகளுக்கு நீதி கோரி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்துகிறது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தடைகளை எதிர்கொள்கிறோம்: மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |