யாழ். பழைய பூங்காவில் உள்ளக அரங்கு அமைக்க இடைக்காலத்தடை
யாழ்ப்பாணம் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் என்பது உட்பட அங்கு அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக யாழ். மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டாணை ஒன்றை வழங்கியிருக்கின்றது.
கிருஷ்ணவேணி சிறிதரன் என்ற மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்து முன்வைத்த வாதங்களின் அடிப்படையில் இந்தக் கட்டாணையை யாழ். மாவட்ட நீதிபதி சிவகுமார் பிறப்பித்துள்ளார்.
பொதுச்சொத்தாக பயன்படுத்த அறிவிப்பு
19ஆம் நூற்றாண்டில் அப்போதைய யாழ். அரச அதிபராக இருந்த டைக் பேர்சிவல் என்பவர் தமது சொந்தக்காணியான இந்தப் பிரதேசத்தை பொதுச்சொத்தாகப் பயன்பட எழுதி வைத்திருந்தார்.

இது தொடர்பில் நம்பிக்கை நிதியம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் பொதுச் சொத்தை பாதுகாக்கும் விடயத்தில் தவறிழைத்து, நம்பிக்கை நிதியப் பூங்காவை அழித்து, உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைக்க முற்படுகின்றனர் எனச் சட்டத்தரணி லிஸ் லேவிதாவின் அனுசரணையுடன் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வாதங்களைச் சமர்ப்பித்தார்.
சட்டத்தரணிகள் பிரபாகரன், சிந்துஜன் ஆகியோரும் அவருக்கு உதவியாளராக முன்னிலையாகி இருந்தனர்.

விரிவான அறிக்கை
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் செம்மணி, அல்லைப்பிட்டி, மண்டைதீவு ஆகிய பகுதிகளில் இத்தகைய உள்ளக விளையாட்டு அரங்குகளை நிறுவுவதற்கான விரிவான அறிக்கைகளை நகர அபிவிருத்தி அதிகார சபை சமர்ப்பித்திருக்கும் நிலையில், அவற்றைப் புறக்கணித்து, இந்த நம்பிக்கை நிதியச் சொத்தை அழித்து, அதன் நோக்கத்தைப் பாழாக்கி, இந்த உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுமந்திரன் மன்றுக்குத் தெரிவித்தார்.
1990 - 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடாநாடு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கூட இந்தப் பூங்காவைக் கட்டிக் காப்பதில் அவர்கள் அதீத சிரத்தை எடுத்தார்கள் என்பதையும் மனுதாரரின் சட்டத்தரணி மன்றுக்குச் சுட்டிக்காட்டி இருந்தார்.
பூங்காவில் அபிவிருத்தி நடவடிக்கை
அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, மேற்படி பூங்காவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் சகல செயற்பாடுகளையும் இடைநிறுத்துவதற்கு இரண்டு வார கால கட்டளையைப் பிறப்பித்த நீதிமன்றம், அதுவரை வழக்கை ஒத்திவைத்து தரப்புகளுக்கு அழைப்பாணை பிறப்பிக்க உத்தரவிட்டது.
நம்பிக்கை நிதிய விவகாரம் என்பதால் குடியியல் நடவடிக்கை சட்ட கோவையின் 16ஆம் பிரிவின் கீழ் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட எவரும் தங்களையும் இடையீட்டுத் தரப்புகளாகச் சேர்க்க விரும்பின் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கும் அறிவுறுத்தலை நீதிமன்றம் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.