இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன.

இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம்.
அதற்கமைய கண்டி மாவட்டத்தில் கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தொலுவ, தொம்பே, தும்பனை, மெததும்பர, மினிப்பே, பஹதஹேவாஹெட்ட, ஹட்டிநுவர, கங்கா இஹல கோரள, அக்குரணை, உடுநுவர, பன்வில, பஹதும்பர, குண்டசாலை, பஸ்பாகே கோரள, ஹதரலியத்த, உடுதும்பர, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, மாவனல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹாவெல, மாவத்தகம, ரிதீகம, மல்லவபிட்டிய மற்றும் அலவ்வ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளையில் அம்பன்கங்க கோரளை, நாவுல, மாத்தளை, பல்லேபொல, உக்குவெல, லக்கல பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் வலிகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை
பதுளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை
கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான நிலைமை இன்னும் நீங்கவில்லை. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தற்போது தங்கியிருக்கும் பாதுகாப்பான இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தப் பகுதிகளில் ஆய்வு நிறைவடையும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த ஆய்வுகள் மாவட்ட செயலாளர்களின் முன்னுரிமைப்படி நடைபெறுவதால், இதற்குச் சில நாட்கள் ஆகலாம்.
சுவர்களில் விரிசல் போன்ற சேதங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவார்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.