தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்
அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்திய குடிமகன் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அடையாளம் காணப்பட்ட நான்கு அதிகாரிகளுள் தேசபந்து தென்னகோனும் ஒருவராவார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
இந்நிலையில் தேசபந்து தென்னகோனுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எவ்வாறாயினும், அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையின் பேரில் மூன்று மாதங்களுக்கு தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபர் தென்னகோனின் நியமனம் மூன்று மாதங்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நியமனம் ஏற்கனவே நிரந்தரமாக கருதப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சட்டமா அதிபருக்கு கடிதம்
எனினும், 21வது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின்படி, பொலிஸ்மா அதிபர் தவிர்ந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றங்கள், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றில் ஆணைக்குழு பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
இதனால் தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சட்டரீதியாக அதிகாரம் உள்ளதா? அத்தகைய அதிகாரம் தமக்கு வழங்கப்படாவிட்டால் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, உயர்நீதிமன்ற நடைமுறைப்படி, இந்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை வழங்கிய மூன்று நீதியரசர்கள் அமர்வுக்கு, குறித்த விவகாரம் மாற்றப்பட்டு மீண்டும் அது தொடர்பில் தெளிவாக்கல் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |