காஸாவில் மருத்துவ உதவி அமைப்பு மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 17 பேர் பலி
காஸா பகுதியில் மருத்துவ உதவி வழங்கி வந்த Médecins Sans Frontières (MSF) எனப்படும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் இரண்டு ஊழியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸா நகரில் அமைந்துள்ள MSF மருத்துவ நிலையம் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல்
குறித்த மருத்துவ நிலையத்தின் இருப்பிடம் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் MSF தெரிவித்துள்ளது.
எனினும், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட இருவரும் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் MSF மருத்துவ நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

மேலும், அவர்கள் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்ததாகவும், இந்த நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
17 ஊழியர்கள் பலி
இந்த கூற்றை மறுத்துள்ள MSF கொல்லப்பட்ட இருவரும் பாதுகாப்புப் பணியாளர்கள் என தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் காஸாவில் உயிரிழந்த தமது ஊழியர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தமது மருத்துவ நிலையம் MSF அடையாளங்களுடன் தெளிவாகக் குறிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் இருப்பிடம் இஸ்ரேல் இராணுவத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ், காஸாவில் சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கண்டித்துள்ளார்.
உயிர்களைக் காப்பாற்றத் தமது உயிரைப் பணயம் வைப்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர தாக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 13 மாதங்களில் காஸாவில் குறைந்தது 1,705 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் நிர்வாகத்தின் கீழுள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7ஆம் திகதி போர் ஆரம்பித்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 74,770க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்த அமைச்சு கூறுகின்றது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டுக்கு ஆபத்து..! அரசாங்கத்திற்கு பைசர் முஸ்தபா எம்.பி. எச்சரிக்கை