தந்தை தயாரித்த வினாத்தாளில் மகன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.. அரச பரீட்சையில் இடம்பெற்றுள்ள முறைகேடு
சட்டமா அதிபர் திணைக்களத்திற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை ஒன்றில் பாரதூரமான நெறிமுறை மீறலும் முறைகேடும் இடம்பெற்றுள்ளதாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்னவினால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உடனடியாக விரிவான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசியப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் ஒருவரின் மகனே அப்பரீட்சையில் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அவர் சபைக்கு அறிவித்துள்ளார்.
பதவி விலகல்..
இவ்வாறானதொரு போட்டிப் பரீட்சைக்குத் தனது மகன் தோற்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே, நிறுவன நெறிமுறைகள் மற்றும் தார்மீக நியமங்களுக்கு அமைய குறித்த அதிகாரி தனது பொறுப்புகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ரோஹினி குமாரி, இங்கு சந்தேகத்திற்கிடமான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

"குறித்த பரீட்சை ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதி நடைபெற்ற போதிலும், பரீட்சைக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலப்பகுதியிலேயே, அதாவது ஜூலை மாதம் 15 ஆம் திகதியே குறித்த அதிகாரி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அதற்கு முன்னரே வினாத்தாள் தயாரித்தல் மற்றும் அது தொடர்பான சகல இரகசியப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டிருந்தன. சகல நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்ட பின்னரே அவர் பதவி விலகியுள்ளார்.
இவ்வாறான பாரதூரமான முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்," எனப் ரோஹினி குமாரி மேலும் வலியுறுத்தியுள்ளார்.