ஈரானிய கப்பல் விவகாரத்தில் இலங்கை எடுத்த முக்கிய முடிவு! அதிகரிக்கும் ஆதரவு கரங்கள்..
சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானியக் கப்பல் மாலுமிகளை மீட்டெடுத்ததன் மூலம், இலங்கை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட மிகச் சரியான முடிவையே எடுத்துள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைக் கடற்பரப்புக்கு அப்பால் தாக்குதலுக்குள்ளான ஈரானியக் கப்பலில் இருந்தவர்களை இலங்கைக் கடற்படையினர் மீட்டெடுத்த நடவடிக்கை, சர்வதேச கடல்சார் சமவாயங்களுக்கு உட்பட்டது.
சட்டத்தில் இடமில்லை..
இக்கட்டான சூழலில் கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவது ஒரு நாட்டின் தார்மீகப் பொறுப்பாகும். தாக்குதலுக்குள்ளான பகுதியில் ஓர் அமெரிக்கக் கப்பல் இருந்திருந்தால் கூட, சர்வதேச சட்டத்தின்படி அவர்கள் ஈரானியப் படையினரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அதுவே சர்வதேச நியதியாகும்.
போர்க்களத்தில் எதிரணி சரணடைய முன்வந்தால் கூட, அவர்களைச் சுட்டுக்கொல்வதற்குச் சர்வதேச சட்டத்தில் இடமில்லை. அவ்வாறிருக்கையில், விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவது கட்டாயமானதாகும்.

ஈரானியக் கப்பல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட வேண்டியது.
ஒருவேளை இலங்கை இந்த மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கத் தவறியிருந்தால், சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அருகே ஈரான் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகளால் இரட்டை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்