இலங்கையை நேரடிப் போர்க்களமாக மாற்றும் சதி நடவடிக்கையில் அமெரிக்கா! வலுவடையும் அச்சம்
இலங்கையை நேரடிப் போர்க்களமாக மாற்றும் சதி நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே ஈரான் கடற்படையைச் சேர்ந்த குழுவினர் பயிற்சியில் ஈடுபட வந்திருந்தனர். அமெரிக்கக் கடற்படையும் இதில் பங்கேற்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்தும் நோக்கம்..
அதே காலகட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஈரானிய போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் இருந்ததாலேயே, அமெரிக்கா இந்தப் பயிற்சியிலிருந்து விலகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் போன்ற சம்பவங்களைக் கணிக்கும் திறன் கொண்ட இந்தியா, இந்த ஆபத்தை நிச்சயம் அறிந்திருக்கும். அவ்வாறு அறிந்திருந்தும் ஈரான் கப்பலை வெளியேற அனுமதித்தது இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஈரானின் இரண்டாவது கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி கோரியபோது, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பலை அனுமதித்தால் வான்வழியாகத் தாக்குதல் நடத்த நேரிடும் என அவர்கள் அச்சுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் துயகொந்தா, 'கப்பல் விவகாரத்தில் இலங்கை பொறுப்பேற்க முடியாது' என ஈரான் தூதுவருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இருப்பினும் இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பிரதி சபாநாயகர் உள்ளிட்டோர் ஜனாதிபதியைச் சந்தித்து அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர்.
நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே கப்பல் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தனது இராணுவப் பலத்தை இழந்து வரும் அமெரிக்கா, இஸ்ரேலைத் தவிர்த்து வேறு பாதுகாப்பான தளங்களைத் தேடி வருகின்றது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை இராணுவ மையமாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் ஹரி குறிப்பிட்டது போல், ஆபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடைப்பட்ட மையப்புள்ளியாக இலங்கை இருப்பதே இதற்குக் காரணமாகும்.
ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதா என்ற அச்சம் தற்போது வலுவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அருகே ஈரான் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகளால் இரட்டை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்