இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய நாட்டவர்
அளுத்கம, மொரகல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்து இணையம் ஊடாக பணம் உழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 35 வயதுடைய ரஷ்ய நாட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எந்தவொரு சட்டபூர்வமான விசா அனுமதியும் இன்றி சுமார் 7 ஆண்டுகளாக இவர் இவ்வாறு நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
சட்டபூர்வமான விசா அனுமதி
கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, வெளிநாட்டவரிடம் இருந்த 5 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சா பொதியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவரது கடவுச்சீட்டைப் பரிசோதித்தபோது, அவர் 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்துள்ளார். அத்துடன், அன்றிலிருந்து நீண்ட காலமாக விசா இன்றித் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இணையம் ஊடாகப் பணம் உழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் சஞ்சீவ தெரிவித்தார்.
இது தவிர, சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான ரஷ்ய நாட்டவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி, இரண்டு மடிக்கணினிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.