உச்சகட்டத்தை எட்டியுள்ள மத்திய கிழக்கு போர் பதற்றம்! பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தாக்குதல்
ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் இராணுவத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது.
புதிய செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன ஆய்வு மற்றும் அணுமின் நிலையத்தின் இருப்பிடம் குறித்த விரிவான தரவுகளைக் கொண்டு இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அணுமின் நிலையத்திற்கு நேரடி பாதிப்பு
குறிப்பாக, ஒரு தாக்குதலானது அணுமின் நிலையத்தின் சுற்றுச்சுவரிலிருந்து வெறும் 75 மீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளதாக ஐநா-வின் இந்த அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதல்களால் அணுமின் நிலையத்திற்கு நேரடி பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புஷெர் அணுமின் நிலைய வளாகத்திற்கு அருகே ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்தது குறித்து கடந்த வாரமே ஈரான் தரப்பில் சர்வதேச அணுசக்தி முகமை அமைப்பிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் பெரும் கவலை
மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், அணுசக்தி மையங்களுக்கு மிக அருகில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை உண்டாக்கும் என்பதால், நிலைமையை சர்வதேச அணுசக்தி முகமை தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.