ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும்..! இன்றாக கூட இருக்கலாம் - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
"நாங்கள் வெறுமனே ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம். மீண்டும் நாங்கள் தாக்கப்படமாட்டோம் என்ற உத்தரவாதங்களுடன் மட்டுமே போர் முடிவுக்கு வருவதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என்று எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் தலைவர் மொஜ்தபா பெர்டோசிபூர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் சிக்கல்
இந்நிலையில், அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நட்பு நாடுகளுக்காக மூடப்பட்ட ஹார்முஸ் நீரிணையை திறந்து விடவும் ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலக் கெடு விதித்திருந்த நிலையில், அவரின் எச்சரிக்கை மற்றும் காலக்கெடுவை ஈரான் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கான காலக்கெடு
அதில், ஈரானில் சிக்கிய அமெரிக்க இராணுவ வீரரை வெற்றிகரமாக மீட்கப்பட்டதை கொண்டாட நாம் இங்கு கூடியுள்ளோம்.

ஈரான் என்ற ஒட்டுமொத்த நாட்டை ஒரு இரவில் அழித்து விட முடியும்.. அந்த இரவு ஒருவேளை இன்றைய இரவாகக்கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தள பதிவில், நாளை (அதாவது இன்று) செவ்வாய்க்கிழமையுடன் ஈரானுக்கான காலக்கெடு முடிகிறது என்றும், ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிடம் மின் நிலையங்களே இருக்காது," என்று மிரட்டல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.