அனல் பறந்த ஆட்டம்: ரொனால்டோவின் அநாயசமான கோல் - ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!
சர்வதேச கால்பந்தில் போர்த்துக்கல் தேசிய அணியில் மீண்டும் இடம் கிடைத்த உற்சாகத்தில், சௌதி ப்ரோ லீக்கில் அல்-நாசர் அணிக்காக நட்சத்திர வீரர் ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம், ஆபா அணியை வீழ்த்திய அல்-நாசர் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை நெருங்கியுள்ளது. கால்பந்து உலகில் அதிகம் அறியப்படாதிருந்த சௌதி ப்ரோ லீக் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்குப் பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகிவிட்டது.
வரலாறு காணாத ஊதிய ஒப்பந்தத்துடன் அந்த அணியில் இணைந்துள்ள அவர், அந்த அணிக்காக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன்மூலம் தனக்கு மட்டுமின்றி, சௌதி ப்ரோ லீக் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் மதிப்பு கிடைத்துள்ளது.
போர்த்துக்கல் அணியில் மீண்டும் இடம்
இதன் எதிரொலியாக, போர்ச்சுகல் தேசிய அணியில் ரொனால்டோ மீண்டும் இடம் பிடித்துள்ளார். ரொனால்டோவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த, கத்தார் உலகக்கோப்பையில் போர்த்துக்கல் அணி விளையாடிய 2 நாக்அவுட் போட்டிகளிலும் அவர் தொடக்கத்திலேயே களமிறங்க அப்போதைய பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் வாய்ப்பு அளிக்கவில்லை.
இதனால், 35 வயதை எட்டிவிட்ட ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நிபுணர்கள் பலரும் கணித்தனர். ஆனால், போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள ரொபர்டோ மார்டினெஸ் அந்தக் கணிப்புகளைப் பொய்யாக்கியுள்ளார்.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டிக்கான போர்த்துக்கல் தேசிய அணியில் ரொனால்டோவுக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார்.
சௌதி ப்ரோ லீக்கில் அசத்திய ரொனால்டோ
போர்த்துக்கல் அணியில் இடம்பிடித்த ரொனால்டோ, சௌதி ப்ரோ லீக் தொடரிலும் புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்புடன், ஆபா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அல்-நாசர் அணிக்காக உற்சாகத்துடன் களமிறங்கினார்.
நடப்புத் தொடரில் அல்-நாசர் அணிக்காக 9 போட்டிகளில் 8 கோல்களை அடித்து இரண்டாவது இடத்திலிருந்த அவர், முதலிடத்திலிருந்த பிரேசிலின் ஆண்டர்சன் தலிஸ்காவை முந்தும் வாய்ப்பு இருந்தது. இதற்கேற்ப, ஆட்டத்தின் தொடக்கம் முதலே ரொனால்டோ புது உத்வேகத்துடன் ஆடியதைப் பார்க்க முடிந்தது.
அல்-நாசர் அணி தொடக்கத்திலேயே தாக்குதல் பாணி ஆட்டத்தைக் கையில் எடுத்தது. பெரும்பாலான நேரம் அந்த அணி வீரர்கள் வசமே பந்து இருந்தது. தங்களுக்குள் அற்புதமாக பாஸ் செய்து கொண்ட அவர்கள், அடிக்கடி ஆபா அணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்ட படி இருந்தனர்.
ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்திலேயே அல்-நாசர் அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆபா அணியின் கோல் கம்பத்திற்கு மிக நெருக்கமாக ரொனால்டோ எதிரணி வீரர்களால் தடுக்கப்பட்டு கீழே விழ, பெனால்டி கேட்டு நடுவரிடம் முறையிட்டார். ஆனால், நடுவர் அதை நிராகரித்துவிட்டார்.
ஆபா அணி முதல் கோல் அடித்து முன்னிலை
இதைத் தொடர்ந்து ஆபா அணியும் தாக்குதல் பாணியை கைக்கொள்ள, ஆட்டத்தில் அனல் பறந்தது. பந்து இரு அணிகளின் கோல் கம்பங்களின் பக்கமும் மாறி மாறிச் சென்ற வண்ணம் இருந்தது. ஆனால், கோல் ஏதும் விழவில்லை.
ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் அந்தத் திருப்புமுனை நிகழ்ந்தது. அல்-நாசர் அணியின் தாக்குதலை முறியடித்த ஆபா அணி வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். அந்த அணியின் சாட் பிகுயிர் கொடுத்த அற்புதமான பாஸை பெற்ற முன்கள வீரர் ஆடம் அதைத் திறமையாகக் கோலுக்குள் திணித்தார்.
இதன்மூலம் ஆபா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் முதல் கோலை அடித்த வீரர் ஆடம், கடன் முறையில் அல்-நாசர் அணியிடம் இருந்து ஆபா அணியால் பெறப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கோலை வாங்கிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு, பதில் கோல் அடிக்க அல்-நாசர் அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஆபா அணி வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் முறியடித்தனர். இதனால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆபா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையிலிருந்தது.
கை நழுவிப் போயின
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது முதலே பதில் கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர அல்-நாசர் அணி முனைப்புடன் செயல்பட்டது. அந்த அணி வீரர்கள் களத்தில் இதற்காகத் துடிப்புடன் மோதினார்கள்.
சில நிமிடங்களிலேயே அல்-நாசர் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, ஆபா அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தை மீறி பந்து உள்ளே செல்ல முடியவில்லை. இதேபோல் அல்-நாசர் அணி வீரர்களுக்குக் கிடைத்த சில வாய்ப்புகள் அடுத்தடுத்து கை நழுவிப் போயின. பந்து அதிக நேரம் அல்-நாசர் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
அந்த அணியின் கையே ஓங்கியிருப்பது போலத் தோன்றினாலும், ஆபா அணியின் தடுப்பரணை அவர்களால் உடைக்க முடியவில்லை.
முடிவில், ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் அல்-நாசர் அணியின் இடையறாத போராட்டத்திற்குப் பலன் கிடைத்தது. அந்த அணிக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் நட்சத்திர வீரர் ரொனால்டோ 35 மீட்டர் தொலைவிலிருந்து அநாயசமாக பந்தைக் கோல் வலைக்குள் திணித்து அசத்தினார்.
ரொனால்டோ அடித்த கோலால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. இதனால், வெற்றி மதில்மேல் பூனையாகிப் போனது. அடுத்த நிமிடத்திலேயே ஆபா வீரர் ஒருவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டதால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
கோல் எண்ணிக்கை
இது அல்-நாசர் அணிக்குச் சாதகமான அம்சமாக மாறியது. ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் அல்-நாசர் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணிக்காக விளையாடும் பிரேசிலைச் சேர்ந்த ஆண்டர்சர் தலிஸ்கா கோலாக மாற்றினார். ஆபா அணி பதில் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால், அல்-நாசர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆபா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் சௌதி ப்ரோ லீக் தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அல்-இதிஹாட் அணியை ரொனால்டோவின் அல்-நாசர் அணி நெருங்கியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. போர்த்துக்கல் தேசிய அணியில் இடம் பிடித்ததன் மூலம் சர்வதேச கால்பந்து வாழ்க்கையைத் தொடரவுள்ள ரொனால்டோ, எதிர்வரும் வியாழக்கிழமையன்று (மார்ச் 23) லிச்டென்ஸ்டெய்ன் அணிக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கிறார்.
சர்வதேச கால்பந்தில் 196 போட்டிகளில் 118 கோல்களை அடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை சிகரத்தில் அமர்ந்துள்ள ரொனால்டோ, தனது கோல் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது.