நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்ட கிராம அலுவலர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சி- குமரபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கிராம அலுவலர் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
கடந்த டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு குமரபுரம் பாடசாலையில் அமைந்திருந்த நலன்புரி நிலையத்தில் தங்கி இருந்த மக்களை பராமரித்து வந்த கிராம அலுவலர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தாக்குதல் மேற்கொண்டார் என கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முழுமையான விசாரணை
குறித்த வழக்கானது கடந்த ஜனவரி மாதம் 20ஆம் அழைக்கப்பட்டு இன்றைய தினம்(28.9.2026) தவனையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று குறித்த வழக்கு காலை எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் மீளவும் பிற்பகல் 1:30 மணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் முறைப்பாட்டாளர்கள் சார்பாக எம்.ஏ சுமந்திரனும் முன்னிலையாகி இருந்தார்.
அதாவது கடந்த 9 மாத காலமாக குறித்த விசாரணை தொடர்பில் பொலிஸார் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்று முன் வைத்த விண்ணப்பத்தை அடுத்து எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் முழுமையான விசாரணை மேற்கொண்டு அறிக்கையிடுமாறும் குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும் மன்று கட்டளையிட்டுள்ளது.