இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார கண்ணோட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இலங்கையின் வருமானம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டாலும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே உள்ளது என்று எனே மாரி குல்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வருமானம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த சில மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே உள்ளது.
இலங்கை மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. அது குறித்து மிகவும் கவலை அடைகின்றேன்.
இலங்கையர்களின் துன்பங்களை, குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிக வேகமாக செயல்பட சர்வதேச நாணய நிதியம் ஆர்வமாக உள்ளது.”என தெரிவித்துள்ளார்.
கடனைத் தீர்க்கும் பொறிமுறை
முன்னதாக இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு, நன்கொடையாளர்களை ஒருங்கிணைக்கும் வழிகளை தேடுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.
அத்துடன் மிகவும் பயனுள்ள கடனைத் தீர்க்கும் பொறிமுறையை வலியுறுத்துவதாக நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டிலினா ஜோர்ஜிவா தெரிவித்தார்.
இந்த தீர்வுப் பொறிமுறை, பொதுவான கட்டமைப்பு வழிகாட்டுதல்களுடன் மிகவும் கணிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்
இதேவேளை செப்டெம்பரில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்காக பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியது.
இந்த ஒப்புதல் வோஷிங்டனை தளமாகக் கொண்ட கடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு முக்கிய படியாக அமைந்துள்ளது.
ஆனால், நிதி வழங்கப்படுவதற்கு முன்னர், தனது அதிக கடன் சுமையை எவ்வாறு மறுசீரமைப்பது என்பதை இலங்கை இன்னும் இறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்