போர்நிறுத்த ஒப்பந்தம்: காசாவில் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்து வெளியான தகவல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும், காசாவின் முக்கிய மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் குழந்தைகளை தாய்மார்கள் பெற்றெடுப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
காசாவின் முக்கிய மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிறக்கும் குழந்தைகள் இயல்பான எடையை விட மிகவும் குறைவாகவும், பலவீனமாகவும் பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் தற்போதைய நிலை
அத்துடன், போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து இல்லாததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் பல குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றன.

போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வு, மன உளைச்சல் மற்றும் பல மாதங்களாக நீடிக்கும் பட்டினி காரணமாகத் தாய்மார்கள் கடுமையான இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய போர்நிறுத்த சூழலில் காசாவிற்குள் நுழையும் மனிதாபிமான உதவிகளின் அளவு அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறினாலும், அது போதுமானதாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஆரோக்கியமற்ற குழந்தை பிறப்பு
இதேவேளை, "தற்போது அனுமதிக்கப்படும் உதவிகள் கடலில் ஒரு துளி போன்றது. குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான சத்தான உணவுகள் மற்றும் மருந்துகள் இன்னும் தட்டுப்பாடாகவே உள்ளன" என ஐ. நா அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச விதிகளின்படி, தாங்கள் போதிய உணவு மற்றும் மருத்துவ உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பதாக இஸ்ரேல் அரசு தொடர்ந்து வாதிட்டு கொண்டிருக்கின்றது.
"ஒவ்வொரு நிமிடமும் பட்டினிக்கு நடுவே 35 குழந்தைகள் பிறக்கின்றன," என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. மூன்று மாத கால போர்நிறுத்த இடைவெளியும் இந்த நீண்டகாலப் பாதிப்பைச் சரிசெய்யப் போதுமானதாக இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.