இந்திரா காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அழைப்பால் காப்பாற்றப்பட்ட கச்சதீவு
இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, (Sirimavo Bandaranaike )1974ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு (Indira Gandhi) மேற்கொண்ட தொலைபேசி அழைப்பே சர்ச்சைக்குரிய கச்சதீவுப் பிரச்சினையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தடம் புரளாமல் காப்பாற்றப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது
இந்த விவகாரமானது நடைபெறவுள்ள இந்திய மக்களவைத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கடந்த மார்ச் 31ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் காங்கிரஸைக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் இறையாண்மை
இந்தநிலையில் 1972 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில் இலங்கையின் வெளிவிவகார செயலாளராக இருந்த டபிள்யூ.டி.ஜெயசிங்க எழுதி, 2003இல் வெளியிடப்பட்ட “கச்சத்தீவு மற்றும் கடல்சார் எல்லை” என்ற நூலில் இந்த விடயம் தொடர்பாக பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலில் கச்சத்தீவு தொடர்பான பேச்சுக்கள் பல ஆண்டுகளாக எவ்வாறு நடந்துள்ளன என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி உச்சி மாநாடு மற்றும் உத்தியோகபூர்வ நிலை விவாதங்களுக்காக சிறிமாவோ பண்டாரநாயக்க புதுடில்லி சென்றபோது கச்சதீவு (Kachchatheevu) மீதான இலங்கையின் இறையாண்மை இனி ஒரு பிரச்சினையாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சிறிமாவோ ஜனவரி 30ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்தார். ஜனவரி 26ஆம் திகதி நடந்த குடியரசு தின விழாவில், சிதைந்து போன யூகோஸ்லாவியாவின் ஜனாதிபதி ஜோசிப் டிட்டோவுடன் கௌரவ விருந்தினர்களில் ஒருவராகவும் பங்கேற்றார்.
இந்த காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் இந்திரா காந்தியும் பல சந்திப்புகளை நடத்தி பல சர்வதேச முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்,
உரிமைப் பிரச்சினை
இருப்பினும், இந்த பேச்சுக்களின் மையமாக கச்சதீவு மற்றும் இலங்கையில் நாடற்ற நிலையில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 1.5 இலட்சம் பேரின் நிலை என்பன அமைந்திருந்தன. நாடற்ற மக்களைப் பொறுத்தவரை இரண்டு தலைவர்களுக்கும் இடையே சமமான எண்ணிக்கையில் தமது நாடுகளுக்கு அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டது.
இதன்படி ஜனவரி 27ஆம் திகதி அவர்களுக்கு இடையே இது தொடர்பில் கடிதங்கள் பரிமாறப்பட்டன. ஆனால், 1921ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளையும் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் வரையப்பட்ட மீன்பிடிக் கோட்டையை அடுத்து உரிமைப் பிரச்சினையை ஏற்படுத்திய கச்சதீவு தொடர்பாக இரண்டு தலைவர்களும் உடன்பாட்டை எட்டவில்லை.
இந்தநிலையில் தமது இந்திய பயணத்தின் ஒரு நாளான ஜனவரி 24ஆம் திகதி இந்திரா காந்திக்கு இந்தியாவில் இருந்தே கடிதம் ஒன்றை எழுதினார். எனினும் இந்திரா காந்தியிடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.
இதனையடுத்து இந்திரா காந்தியுடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறு சிறிமாவோ தமது அதிகாரிக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் இந்தியாவில் இருந்து கொண்டே சிறிமாவோ, இந்திரா காந்திக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்,
இந்தநிலையில் மதிய உணவுக்குப் பின்னர் இந்திய பிரதமரும் இலங்கை பிரதமரும் முறைசாரா சந்திப்பை மேற்கொண்டதாக நூலாசிரியர் ஜெயசிங்க தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தம்
இதன்போது இந்திரா காந்தியிடம் விடயத்தை எடுத்துரைத்த பண்டாரநாயக்க, கச்சதீவின் உரிமை மற்றும் இறையாண்மை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்தார்.
எனினும். அத்தகைய பொதியை தமிழக அரசிடம் கொண்டு செல்வது கடினம் என்று இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் கூறியதாக இலங்கை இராஜதந்திரி ஜெயசிங்க தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்தநிலையில் இறுதியில், கச்சதீவுக்கு மேற்கே ஒரு கடல் மைல் தொலைவில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வரைவதற்கு இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இதன்படி அவர்களுக்கு இடையிலான முறையான ஒப்பந்தம் ஐந்து மாதங்களுக்கு பின்னரே கையெழுத்தானது என்றும் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |