சீக்கியர்களால் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட உயர்ஸ்தானிகர்: இந்தியா கடும் கண்டனம்(Video)
பிரித்தானியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்கொட்லாந்திலுள்ள குருத்வாரா ஒன்றின் முன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவிலுள்ள குருத்வாரா ஒன்றில், கமிட்டி உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றிற்காக, பிரித்தானியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரான விக்ரம் தொரைசாமி (Vikram Doraiswami) சென்றிருந்த நிலையில், அவர் குருத்வாரா வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதன்போது, குருத்வாராவின் முன் கூடியிருந்த சீக்கியர்கள் சிலர், உயர் ஸ்தானிகர் இங்கு வரக்கூடாது, அவர் திரும்பிச் செல்லவேண்டும் என்று குரல் எழுப்பிய நிலையில், சிலர் அவரது காரைத் திறக்க முயன்றுள்ளனர்.
காணொளி காட்சி
சிறிதுநேர குழப்பத்துக்குப் பின், காரிலிருந்து இறங்காமலே இந்திய உயர் ஸ்தானிகர் திரும்பிச் சென்றுள்ளார்.
அத்துடன், காலிஸ்தான் ஆதரவு சீக்கியர் ஒருவர், இந்திய அதிகாரிகள் யாருக்கும் பிரித்தானியாவிலுள்ள குருத்வாராக்களில் வரவேற்பு இல்லை என்றும், இங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டதுபோலத்தான் குருத்வாராக்களுக்கு வரும் எல்லா இந்திய அதிகாரிகளும் இனி நடத்தப்படுவார்கள் என்றும் கூறும் காட்சிகளும் அதே காணொளியொன்றில் பதிவாகியுள்ளன.
அத்துடன், சீக்கியர்கள் கனடாவிலும் பிற இடங்களிலும் பாதிக்கப்படுகிறார்கள், நாங்கள் கிளாஸ்கோவில் செய்ததுபோல, எல்லா சீக்கியர்களும் எல்லா இந்திய தூதர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்றும் சீக்கியர் ஒருவர் கூறும் காட்சிகளும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கனடாவில் பிரிவினைவாத சீக்கியர் தலைவர் கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தெளிவாகியுள்ளது.
மேலும், பிரித்தானியாவில் இந்திய உயர் ஸ்தானிகர் அவமதிக்கப்பட்டதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.