உலகத்தை வாக்கெடுப்புக்கு அழைக்காது கரிநாள் என்பதில் பயனில்லை: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கருத்து
உலகத்தை வாக்கெடுப்புக்கு அழைக்காமல் கரிநாள் என்று சொல்லி பயனில்லை என வடக்கு,கிழக்கு தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சிங்கள சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தமிழ் தலைவர்கள் எதிர்கால நோக்கு இல்லாமல் பல தவறுகளை இழைத்துள்ளனர்.
75 வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள் இவ்வளவு பேரழிவை நினைத்துப் பார்த்ததில்லை. அவர்கள் கொழும்பு ஆடம்பர வாழ்க்கையை விரும்பினர், அவர்கள் வடகிழக்குக்கு திரும்ப விரும்பவில்லை.
தமிழ் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை
சுதந்திர போராட்ட காலத்தில் தமிழ்த் தலைவர்கள் தமிழ் இறையாமையையோ, சமஷ்டியையோ கேட்காததற்கு கொழும்பு ஆடம்பர வாழ்க்கையே காரணம். எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத ஒரு மாயை 50/50 அரசியல் அதிகாரம் என்று தமிழர்கள் பேசினார்கள்.பின்னர் சமஷ்டி பற்றி தொடர்ந்து பேசினார்கள், ஆனால் சமஷ்டி பற்றி பேசுவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் மறுக்க முடியாத சுயநிர்ணய உரிமையை மறந்துவிட்டார்கள்.
தமிழர்கள் பல தவறு இழைத்தார்கள்
தமிழர்கள் பல தவறுகளை இழைத்தார்கள், சி.சுந்தரலிங்கம் தான் முதலில் சிங்கள ஆட்சியை ஏற்று டி.எஸ்.சேனநாயக்க அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்றார். சில வருடங்களின் பின்னர் தமிழீழத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பல தமிழர்கள் சுந்தரலிங்கத்தைப் பின்பற்றி சிங்கள அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் இருப்பை மறந்துவிட்டனர்.
தந்தை செல்வா 3 தசாப்தங்களாக சமஷ்டிக்காக குரல் கொடுத்தார், பின்னர்
ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் மு. திருச்செல்வம் ஆகியோருடன் இணைந்து தமிழீழம்
வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.
தமிழர்களை ஏமாற்றினார்கள்
அதன் பின்னர் வந்த சம்பந்தன் - சுமந்திரன் குழு, எமக்கிருக்கும் 75 வருட அரசியல் அனுபவம், சிங்கள அரசுக்கு எதிரான 35 ஆண்டு கால போர் மற்றும் அதன் வலிமை, போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, சர்வதேச நீதி உள்ளிட்ட அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு எமது உரிமைகளை "எக்கிய ராஜ்ஜா" மூலம் எப்படிப் பெறுவது என்பது தெரியும் என்று கூறினார்கள்.இப்போது இந்த சம்பந்தன் - சுமந்திரன் தங்கள் நலனுக்காக தமிழர்களை ஏமாற்றினார்கள் என்பது தெரிந்த விடயம்.
சுயநிர்ணய உரிமை
மேலும் 13வது திருத்தம் ஒற்றையாட்சி சிங்கள ஆட்சியின் கீழ் உள்ளது.இந்த காரணத்திற்காக, 13 வது திருத்தம் தமிழர்களின் விருப்பமல்ல. 1987இல் தமிழ்த் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டது.
13வது திருத்தம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து போர் ஆரம்பமானது. தயவு செய்து 13வது திருத்தத்தையோ சமஷ்டியையோ கோராதீர்கள், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கோருங்கள்.
பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்
தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தமிழ் இறையாமையை பெற முடியும். எமது இலக்கான தமிழர் இறையாண்மையை அடைவதற்கு எமக்கு ஒரு பாதை உள்ளது.
தமிழக முதல்வர் தமிழக சட்டசபையில் தனது உரையின் போது நமது இலக்கை எப்படி அடைய வேண்டும் என்று வழிகாட்டினார். தாயகத்தில் உள்ள தமிழர்களாகிய நாமும், புலம்பெயர் தமிழர்களும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகின்றோம்.
ஆனால் இரு தினங்களுக்கு முன், இந்த தமிழ் அரசியல்வாதிகள் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்த போது, அவர்கள் தமிழ் பொது வாக்கெடுப்பு கேட்கவில்லை, இரண்டு இனக் கட்டமைப்புகளுடன் வேலை செய்யாத சமஷடியை மட்டுமே கேட்டார்கள்.
எமது தாயகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் காலதாமதமின்றி பொதுவாக்கெடுப்புக்கு
அழைப்பு விடுக்க வேண்டும் என வேண்டி பிரார்த்தனை செய்கிறோம் என
தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
