இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் : அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி
இந்தியா(India)-அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 4ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.
இந்த போட்டியில், அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ஓட்டங்கள் குவித்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அவுஸ்திரேலிய அணி
105 ஓட்டங்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய அணி நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் நேதன் லயன் 41 ஓட்டங்களிலும், போலண்டு 10 ஓட்டங்களிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.
333 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட்டான லயன் 41ஓட்டங்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதற்கமைய அவுஸ்திரேலிய அணி 83.4 ஓவரில் 234 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனால் இந்தியாவுக்கு 340 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி
340 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்தது. மதிய உணவு இடை வேளைக்குள் 33 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்தது.
ரோகித் சர்மா 9 ஓட்டங்களிலும், கே.எல். ராகுல் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ஓட்டங்களிலும் ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4ஆவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலும், ரிஷப் பண்டும் பொறுப்புடன் விளையாடிய நிலையில் ஜெய்ஸ்வால் 127 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரியுடன் 50 ஓட்டங்களை பெற்றார். முதல் இன்னிங்சிலும் அவர் அரை சதம் (82 ஓட்டங்கள்) அடித்து இருந்தார்.
18ஆவது டெஸ்டில் விளையாடும் ஜெய்ஸ்வாலுக்கு இது 10ஆவது அரை சதமாகும். இதற்கமைய 49ஆவது ஓவரில் இந்தியா 100 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து ரிஷப் பண்ட் 30, ஜடேஜா 2, நிதிஷ் 1, ஜெய்ஸ்வால் 84, ஆகாஷ் தீப் 7, பும்ரா 0, சிராஜ் 0 என வெளியேறினர்.
இதனால் அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |