கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (Video)
கிழக்கு மாகாணத்தில் 45 நாட்களுக்குள் 1363 டெங்கு நோயாளர்கள் இணங் காணப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணரும், சமூக வைத்திய நிபுணருமான டொக்டர் எஸ் அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
டெங்கு தொற்று தொடர்பில் நேற்றைய தினம் (20.02.2023) கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 780 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 203 டெங்கு நோயாளர்களும், அக்கரைப்பற்றில் 148 நோயாளர்களும் அட்டாளைச்சேனையில் 118 நோயாளர்களும் இனங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 25 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 315 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதுடன், செங்கலடி, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு நகரம் போன்ற இடங்களில் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 243 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நுளம்புகள்
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 87 நோயாளர்களும், உப்புவெளி பகுதியில் 58 நோயாளர்களும், மூதூர் சுகாதார அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 டெங்கு நோயாளர்களும், கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 19 நோயாளர்களும், கிண்ணியாவில் 18 நோயாளர்களும், குச்சவெளியில் 16 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
ஆகவே, பொதுமக்கள் சுற்றுப்புற சூழல்களைச் சுத்தமாகவும், டெங்கு நுளம்புகள் பரவும்
விதத்தில் காணப்படும் பொருட்களை அகற்றுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்
பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.