கிங்ஸ்பரி ஹோட்டலுக்குச் சென்ற கஸ்ஸப்ப தேரர்! சர்ச்சைக்குப் பின்னால் உள்ள உண்மை..
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலுக்குச் செல்லும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட சிலரும் அந்தக் காணொளியில் காணப்பட்ட நிலையில், பிக்குவொருவர் ஆடம்பர ஹோட்டலுக்குச் சென்றமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள்
இந்தச் சம்பவம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் குழுவொன்று இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தப்போவ ஹேமரதன தேரர், சமூக ஊடகங்களில் பரவிய காணொளிக்குப் பின்னால் உள்ள உண்மை வேறுபட்டது எனத் தெரிவித்துள்ளார்.

சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது பலங்கொட காஷ்யப தேரர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், குளிரைத் தணிப்பதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட காவி உடையால் தலையை மூடியவாறே அவர் தர்மப் பிரசங்கம் நிகழ்த்தியதாகவும் ஹேமரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு மருந்துகளைப் பெற்றுக்கொண்டு, வெந்நீரில் குளித்து ஓய்வெடுக்கக்கூடிய இடத்திற்குச் செல்லுமாறு தாம் ஆலோசனை வழங்கியபோதும், காஷ்யப தேரர் ஆரம்பத்தில் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அழைப்பு கிடைக்கவில்லை
மேலும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட பிக்குகள் ஓய்வெடுப்பதற்கோ, குளிப்பதற்கோ எந்தவொரு விகாரையிலிருந்தும் அப்போது அழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்யப தேரரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தொடர்பில் ஏனைய பிக்குகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதாகவும் ஹேமரதன தேரர் கூறியுள்ளார்.

அப்போதைய சூழ்நிலையில் மருத்துவமனைக்குச் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நன்கொடையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பான இடமொன்றுக்குச் செல்ல பிக்குகள் தீர்மானித்ததாகவும், தாமும் சந்தகித்தி தேரரும் காஷ்யப தேரருடன் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியான காணொளி
எனினும், அங்கு சென்ற பின்னரே அது கிங்ஸ்பரி ஹோட்டல் என்பதைத் தாங்கள் அறிந்துகொண்டதாகவும் ஹேமரதன தேரர் தெரிவித்துள்ளார்.
காஷ்யப தேரர் கடுமையான காய்ச்சலால் நடுங்கியபடியே ஹோட்டலுக்குச் சென்றதாகவும், அங்கு சென்றதும் லயனல் என்ற நன்கொடையாளர் உள்ளிட்டோர் மருத்துவர்களை ஹோட்டலுக்கு வரவழைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், சமூக ஊடகங்களில் கஸ்ஸப்ப தேரர் ஹோட்டலுக்குச் செல்லும் காட்சிகள் மட்டுமே பரப்பப்பட்டதாகவும், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் ஹோட்டலுக்கு வந்து சிகிச்சை அளித்த காட்சிகள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் மீது விமர்சனங்களை ஏற்படுத்தும் நோக்கில், சம்பவத்தின் ஒரு பகுதி மட்டுமே காணொளியாகப் பரப்பப்பட்டுள்ளதாக தப்போவ ஹேமரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam