ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு
மத்திய கிழக்கில் யுத்த ஆபத்துக்கள் நீடிக்கும் நிலையிலும், ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தின் மீது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது.
அத்துடன் செப்டெம்பர் மாதத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் மசகு எண்ணெய் ஏற்றுமதி யுத்தத்திற்கு முந்தைய மட்டத்தை விட அதிகரித்துள்ளதாகக் கப்பல் போக்குவரத்துத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கிப்ளர் மற்றும் வோர்டெக்சா ஆகிய நிறுவனங்களின் தரவுகளின்படி, செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஏழு நாட்களில் பிராந்தியத்திலிருந்து மசகு எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றுக்கு சராசரியாக 18.3 மில்லியன் பீப்பாய்களாகப் பதிவாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
சவூதி அரேபியா தனது சந்தைப் பங்கை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் ஏற்றுமதியை உயர்த்தியமையே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்துடன் ஈராக்கிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியே பயணிக்க ஈரான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, ஈராக்கின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.
எனினும், ஹோர்முஸ் நீரிணை வழியே பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த வாரம் மட்டும் குறைந்தது ஏழு தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ட்ரோன் தாக்குதல்கள்
அக்டோபர் 1ஆம் திகதி குவைத்திற்குச் சொந்தமான 'காசிமா III' எனும் மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல் மீதும், அக்டோபர் 4ஆம் திகதி ஓமான் கடற்பரப்புக்கு அருகில் 'லிப்ஸி' எனும் கப்பல் மீதும் ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக இரு சம்பவங்களிலும் மாலுமிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஈரானியப் படைகள் குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்குவதற்குப் பதிலாக, ரேடார் சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த கடல் எல்லைப் பகுதிக்குள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.