பிரித்தானிய தளத்தை தாக்க ஈரானின் இரகசிய சதித்திட்டம் - அதிரடியாக ஐவர் கைது
பிரித்தானியாவிலுள்ள பிரதான இராணுவ விமானப் படைத்தளத்திற்கு அண்மையில் பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த தனது B-1 போர் விமானங்களை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.
லண்டனுக்கு மேற்கே அமைந்துள்ள RAF ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford) விமானப் படைத்தளத்திற்கு அருகே பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு ஈரானின் பின்னணி இருக்கலாம் எனப் பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் சுட்டிக்காட்டியிருந்தார்.
அமெரிக்கப் வான்படையின் கனரக போர் விமானங்களை இயக்குவதற்கு ஐரோப்பாவிலுள்ள மிக முக்கிய தளங்களில் ஒன்றாக ஃபேர்ஃபோர்ட் விளங்குகின்றது. ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு இந்தத் தளமே பயன்படுத்தப்பட்டிருந்தது.
திரும்பி பெறப்பட்ட விமானம்
இந்த நிலையில், அங்கிருந்த 12 B-1 போர் விமானங்களும் அமெரிக்காவிலுள்ள தாய் தளங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஈரான் முழுமையாக மறுத்துள்ளதுடன், இவை ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
விமானங்களின் இந்த இடமாற்றம் நேட்டோ அமைப்பின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் திறனில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.