இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் மீதான வருமான வரி விதிப்பு : நீதிமன்றின் யோசனை
இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் மீதான வருமான வரி விதிப்பு தொடர்பான வழக்கில், அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டைக் காண வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கியத் தகவலின்படி, கிரிக்கெட் வீரர்கள் எவரும் எந்தவொரு வேலைவாய்ப்பு நன்மைகளையும் பெறுவதில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருமான வரி விதிப்பு
தேசிய கிரிக்கெட் வீரர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊழியர்களாகக் கருதி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அவர்கள் பெறும் கொடுப்பனவுகளின் மீது தடுப்பு வரியை (Withholding Tax) விதித்தமைக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சொய்சா, இந்தத் தடுப்பு வரி விதிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்று கூறியதுடன், இது கிரிக்கெட் ஏற்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
வழக்கில் எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவளிக்க விரும்பாத நீதிமன்றம், கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி, பங்குதாரர்கள் அனைவரும் சந்தித்துப் பேசி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
மேலதிக விசாரணை
ஆண் கிரிக்கெட் வீரர்களான சரித் அசலங்க மற்றும் தனஞ்சய டி சில்வா சார்பில் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமரத்ன உள்ளிட்டோர் முன்னிலையாகினர்.

பெண் கிரிக்கெட் வீரர்களான சமரி அத்தபத்து மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ரால் முன்னிலையானார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜெயசிங்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சார்பாக முன்னிலையானார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை மற்றும் சமர்ப்பிப்புக்கள் எதிர்வரும் நவம்பர் 18, நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 2 ஆகிய திகதிகளில் தொடரவுள்ளன.