பிரித்தானிய விமானப்படை தளச் சம்பவம்: அமெரிக்கா வெளியிட்டுள்ள சந்தேகம்
பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள விமானப்படை தளத்திற்கு அருகில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான சம்பவத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்தியொன்றின் தலையீடு இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களுக்கு அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் இங்கிலாந்தின் 'ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்ட்' (RAF Fairford) விமானப்படை தளத்திற்கு அருகில், வெடிபொருட்கள் மற்றும் பயங்கரவாதச் சந்தேகத்தின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐந்து பிரித்தானியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
லண்டனைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க குறித்த ஐந்து இளைஞர்களும், தளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூன்று வெள்ளை நிற வாகனங்களில் நின்றிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தீவிர விசாரணை
எனினும், தீவிர விசாரணைக்குப் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பிரித்தானியப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, பிரித்தானியாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் மிகவும் பாரதூரமானது என்றும், இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்தி ஒன்றின் கரங்கள் தெளிவாக ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்தச் சம்பவம் ஈரானுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், தங்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் முழுமையாக மறுத்துள்ளதுடன், இச்சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.