உக்ரைன் அகதிகளுக்கு உதவுபவர்களுக்கு பணப்பரிசு! பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில்,ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் இராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 18 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருவதனால் இலட்சக்கணக்கான பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியறேி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில், இர்பின் நகரில் இடிந்த வீடுகள், உருக்குலைந்த சாலைகளின் நடுவே பொதுமக்கள் இராணுவ வீரர்கள் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டும் வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், உக்ரைன் அகதிகளுக்கு தங்க இடமளிக்கும் பிரித்தானியர்களுக்கு மாதத்திற்கு பணம் வழங்கப்படும் என பிரித்தானிய அரசு முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, ‘Homes for Ukraine’ என்றழைக்கப்படும் புதிய திட்டத்தின் கீழ், குடும்ப உறவுகள் இல்லாவிட்டாலும், போரிலிருந்து வரும் அகதிகளை பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அகதிகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தங்க அறை அல்லது வீட்டை வழங்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு மாதத்திற்கு 350 பவுண்டுகள் கொடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் சமூகக் குழுக்களின் உறுப்பினர்கள் அடுத்த வார இறுதிக்குள் இணையப் பக்கத்தின் மூலம் தங்க இடமளிக்க முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.