களுவாஞ்சிக்குடியில் காட்டு யானைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு - அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் காட்டு யானைகளினால் தோட்டச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாம் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக காட்டு யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
காட்டு யானைகளின் அட்டகாசம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை தேற்றாத்தீவு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் விவசாய செய்கைகளை பாதிக்கச் செய்துள்ளதுடன் அறுவடை நிலையிலிருந்த மிளகாய் தோட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பயிர் தோட்டங்கள்
யானையின் அட்டகாசம் காரணமாக மிளகாய், சோளம், கச்சான், கத்தரி போன்ற பல்வேறு பயிர் தோட்டங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
யானையின் அட்டகாசங்கள் தற்போதுதான் இப்பகுதியில் ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு முன்னர் ஆற்றுக்கு அப்பால் உள்ள கரை பகுதிகளிலேயே இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, இழப்பீடுகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.











ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
