பிரித்தானிய பிரதமரை பதவி விலகுமாறு கோரி அழுத்தம்
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மரை பதவி விலகுமாறு ஸ்கொட்லாந்து தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் விவகாரம் காரணமாக இவ்வாறு பதவி விலகுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்கொட்லாந்து தொழிற்கட்சித் தலைவர் அனாஸ் சார்வார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பிரித்தானியாவின் தலைமைப் பதவியில் மாற்றம் தேவை எனவும் கவனச் சிதறல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்மரின் பணிக்குழாமைச் சேர்ந்த சிலர் தங்களது பதவிகளிலிருந்து விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பிரதமரின் தலைமை செயலாளராக கடமையாற்றிய மோர்கன் மெக்ஸ்வினி, பிரதமரின் தொடர்பாடல் பிரிவு பிரதானி ரிம் எலான் ஆகியோர் தங்களது பதவிகளை துறந்துள்ளனர்.
பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டில் பிரதமரின் பணிக்குழாம் அதிகாரிகள் சிலர் இவவ்ர்று பதவி விலகியுள்ளனர்.
இந்த பதவி விலகல்களைத் தொடர்ந்து முன்னோக்கி நகர வேண்டியது அவசியமானது என பிரதமர் ஸ்டார்மர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டை மாற்ற வேண்டும் என்ற நல் எண்ணத்துடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுக்கப்பட்டு வரும் பயணம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்டார்மரின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பிரதமருக்கு தங்களது பூரண ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.