சூரியபுர சதுப்புநிலத்தில் சிக்கிய காட்டு யானை இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு
கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனரஞ்சன குலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த ஒரு காட்டு யானையை, வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பெரும் முயற்சியின் பின்னர் மீட்டனர்.
நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர், சேற்றில் ஒரு யானை அசைவற்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது குறித்துத் தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள், யானையின் நிலையைக் கண்டறிந்து, அதனை மீட்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
யானை ஆழமான சேற்றில் சிக்கியிருந்ததாலும், இரவு நேரமாக இருந்ததாலும் மீட்புப் பணிகள் உடனடியாகத் தடைபட்டன. மறுநாள் காலை, வனவிலங்கு அதிகாரிகள், சூரியபுர பொலிஸார், இராணுவத்தினர், மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் என பலரும் இணைந்து மீட்பு நடவடிக்கையை மீண்டும் தொடங்கினர். யானையின் வயது சுமார் பதினைந்து என்றும், அதற்கு ஒரு சிறிய தந்தம் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கியிருந்ததால் யானை சோர்வாகக் காணப்பட்டது. நீண்ட நேரம் போராடிய குழுவினர், இயந்திரங்களின் உதவியுடன் யானையை கவனமாக சேற்றிலிருந்து வெளியே எடுத்தனர்.
வெளியே வந்த யானைக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. அதன் உடல்நிலை சீராகிய பின்னர், அது மீண்டும் காட்டில் விடப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், வனவிலங்குகள் நீர்நிலைகள் தேடிவரும்போது இத்தகைய விபத்துகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



