ஈரானிய ஆட்சியுடன் உடனடி அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவது கடினம் - நிலைப்பாட்டை அறிவித்த அமெரிக்கா
ஈரானிய ஆட்சியுடன் உடனடி அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவது மிகவும் கடினமானது என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வர்த்தகக் கப்பல்கள் மற்றும் சிவிலியன் மாலுமிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
கடுமையான பொருளாதார தடை
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்தும் வரை, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரப் தடைகளும் அழுத்தங்களும் தொடர்ந்து பிரயோகிக்கப்படும் என வலியுறுத்தினார்.
இதேவேளை வோஷிங்டன் ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏனைய பேச்சுவார்த்தைகள்
முன்னர் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு பின்னரே ஏனைய பேச்சுவார்த்தைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், 7 நாட்கள் காலக்கெடு அடங்கிய முன்மொழிவு அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அராக்சி தெரிவித்தார்.