எக்னெலிகொட விவகாரம்! ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட காரணத்தை வெளியிட்ட நாமல்
நாட்டின் பெரும்பான்மையினமான பௌத்தர்களை ஏறி மிதித்துக்கொண்டு, நாங்கள் இனவாதிகள் அல்லர் என்பதை ஏனைய இனத்தவர்களுக்குக் காண்பிக்க அரசு முயற்சிப்பது முற்றிலும் தவறான செயலாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தவறுகளை திருத்திக்கொண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், பௌத்த பிக்குகளை அவமதிப்பதை அரசு உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எக்னெலிகொட வழக்கு விவகாரம்
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"எக்னெலிகொட வழக்கு விவகாரம் தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்காகவே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அந்த பொதுமன்னிப்பு தற்போது இரத்துச்செய்யப்பட்டு அவர் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து அரசு பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் தவறு காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறாயின், அந்தத் தவறைத் திருத்திக்கொண்டு ஞானசார தேரருக்குத் தற்போதைய ஜனாதிபதியால் ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது? என்று கேள்வி எழுப்பினார்.
அரசின் செயற்பாடுகள்
அரசின் செயற்பாடுகள் குறித்து மேலும் சாடிய அவர், "நாட்டின் பெரும்பான்மையினமான பௌத்தர்களை ஏறி மிதித்துக்கொண்டு, நாங்கள் இனவாதிகள் அல்லர் என்ற நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்திக்கொண்டு அரசுதான் இனவாதத்தைத் தூண்டிவிடுகின்றது.

மகா சங்கத்தினருக்கும், பௌத்த பிக்குகளுக்கும் எதிராகத் திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசு அவர்களை அவமதித்து வருகின்றது.
அத்துடன் மகா சங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு முரணாகவே அரசு தொடர்ந்து செயற்பட்டும் வருகின்றது என்றார்.