கடவுச்சொல்லை மறந்த நாமலின் செயலாளர்! சிக்கிய பெருந்தொகை பணம் தொடர்பில் வெளியான தகவல்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க தொடர்பில் நீதிமன்றில் பல தகவல்களை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவுக்கு நேற்று பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பிணையில் செல்ல அனுமதி
இதன்படி, சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலின்படி, அதன் புலனாய்வு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அவரது வீட்டில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர்.
நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சய சமரசிங்கவே குறித்த வீட்டின் உரிமையாளர் ஆவார். சுமார் 4 மணி நேரம் நீடித்த தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, அந்த வீட்டிலிருந்து புலனாய்வு அதிகாரிகளால் ஒரு பாதுகாப்பு பெட்டகம் கைப்பற்றப்பட்டதுடன், கடவுச்சொல்லை மறந்துவிட்டதாக சந்தேகநபர் கூறியிருந்தார்.
சந்தேகநபர் மறுநாள் காலையில் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்று வாக்குமூலம் அளித்த நிலையில், வாக்குமூலத்தை பதிவுசெய்த பின்னர் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
புலனாய்வு அதிகாரிகள் முன்வைத்த சாட்சியங்கள்
இந்நிலையில், நேற்றைய தினம் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் தங்களது சாட்சியங்களை இவ்வாறு முன்வைத்துள்ளனர்.

இம்மாதம் 16 ஆம் திகதி, சந்தேகநபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒரு அலமாரியில் பாதுகாப்புப்பெட்டகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை திறக்குமாறு பலமுறை கோரிய போதிலும், அதன் 'பாதுகாப்பு பெட்டக கடவுச்சொல்' தனக்கு நினைவில் இல்லை என்று சந்தேகநபர் கூறினார்.
இதன்பின்னர், அதை தயாரித்த நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் அதை திறந்தனர்.
அதற்குள் ரூ. 1,805,000/ பணம் மற்றும் சுமார் ரூ. 0.8 மில்லியன் மதிப்புள்ள கைக்கடிகாரம் மற்றும் எட்டு தங்க முலாம் பூசப்பட்ட கால் சலங்கைகள் கண்டெடுக்கப்பட்டன.
கண்டெடுக்கப்பட்ட பணத்தில் ரூ. 1.5 மில்லியன் தன்னுடையது என்றும், மீதமுள்ளவை தனது பெற்றோருடையது என்றும் சந்தேகநபர் கூறினார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாகனத்தை விற்றதன் மூலம் அந்த பணத்தை பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், சந்தேகநபரின் ஆரம்ப வாக்குமூலத்திற்கும் நேற்றைய வாக்குமூலத்திற்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, குற்றச்செயல் வருமானச் சட்டம் எண் 05/2025-இன் பிரிவு 72 (1)-இன் படி விசாரணைகள் நடத்தப்படுவதால், சந்தேகநபரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு விசாரணை அதிகாரி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
சந்தேகநபர் சார்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள்
இதன்போது, சந்தேகநபர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், உண்மைகளைக் கூறி நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
16 ஆம் திகதி இரவு சுமார் 10 மணியளவில், இலஞ்சத்தடுப்பு ஆணையக்குழு அதிகாரிகள் குழுவினர் வந்து, மறுநாள் காலை 4 மணி வரை எனது கட்சிக்காரரின் வீடு முழுவதையும் சோதனையிட்டனர்.

ஹெரோயின், கோகைன், இரத்தினங்கள், சட்டவிரோத துப்பாக்கிகள் போன்ற எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இறுதியாக, ஒரு அலமாரியில் ஒரு சிறிய பாதுகாப்பு பெட்டகத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.
அதில் கண்டெடுக்கப்பட்ட பணம், எனது கட்சிக்காரர் ஒரு வாகனத்தை விற்றதன் மூலம் பெற்ற பணமாகும். மீதமுள்ள தொகை அவரது தந்தைக்கு சொந்தமானது. அந்த வாகனம் தொடர்பான ஆவணங்களையும் நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். அந்த பணம் அவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை கருத்தில்கொண்ட நீதவான் சந்தேகநபரை பிணையில் செல்ல உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 18 அன்று மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.