எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கை சுங்கத்தின் புதிய நடைமுறை! சர்வதேச நாணய நிதியம் ஆதரவு
இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் 2026 அக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள காகிதமற்ற சுங்க அறிவிப்புத் திட்ட செயலாக்க முறைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கலந்துரையாடல் ஜனாதிபதிச் செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
பிரதிநிதிகளுக்கு விளக்கம்
இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான நிர்வாகம், சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் அதிகாரிகள், புதிய முறைமை, விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் தொழில்நுட்ப தயார்நிலை குறித்து சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.
இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை சுங்கம் மற்றும் ஜனாதிபதிச் செயலகத்தின் வருமான நிர்வாகச் சீர்திருத்தப் பிரிவு மேற்கொண்ட பங்களிப்பை சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.

தேவையான ஆதரவு
மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்கவும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
வருமான நிர்வாகம், சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட, இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தினா பிரிகார்தினி மற்றும் கிளாகோவ் அகபனிட்சாவோர்ன் ஆகியோர் கலந்துகொண்டனர்.