NDB நிதி மோசடியின் எதிரொலி: மத்திய வங்கிக்கு ஐஎம்எப் அவசர அறிவுறுத்தல்..
தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) தொடர்பான பல பில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் வங்கித் துறைக்கான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறைகளை மேலும் கடுமையாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF), இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வு அறிக்கையில், மத்திய வங்கியின் இந்த ஒழுங்குமுறைப் பொறுப்பை அவசரமாக வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிதி மோசடி
இந்தக் கடுமையான நிதி முறைகேடு குறித்து விவாதிக்க அண்மையில் அரசாங்க நிதி தொடர்பான குழு (CoPF) மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு இடையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவும் பங்கேற்றிருந்தார்.
இந்த மோசடியின் மூல காரணங்கள் மற்றும் அது எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதை கண்டறிவதற்காக ஏற்கனவே தடயவியல் (Forensic) தணிக்கை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிற்கு தெரிவித்தனர்.
இந்த விசாரணையின் எல்லைகளைத் தீர்மானிப்பதில் குற்றச்சாட்டுக்கு உள்ளான தேசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய வங்கி செயல்படுவது குறித்து டாக்டர் ஹர்ஷ டி சில்வாவும், குழு உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் கேள்வி எழுப்பினர்.
சர்வதேச நாணய நிதியம்
இதற்கு பதிலளித்த மத்திய வங்கி அதிகாரிகள், விசாரணையின் வரம்பு தொடர்பான ஆரம்பகட்டத் திட்டம் மட்டுமே சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பெறப்பட்டதாகவும், பின்னர் மத்திய வங்கியின் நேரடி தலையீட்டின் மூலம் அது முறையாக வடிவமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கான பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய இந்த விரிவான விசாரணையின் இடைக்கால அறிக்கை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இறுதி அறிக்கை ஜூலை 18 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி, இந்த சிக்கலான மோசடி நடவடிக்கையின் மூலம் வங்கி அமைப்பிலிருந்து சுமார் 13 பில்லியன் ரூபாய் முறைகேடாக அபகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த மோசடியின் மூலம் திருடப்பட்ட பணம் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விசேட தகவலை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.