சுவிட்சர்லாந்து தூதுவருடன் பிரதமர் ஹரிணி விசேட சந்திப்பு
இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வால்ட் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது.
அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து, பிரதமர் தனது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நவீன தொழிற்பயிற்சி
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதுடன், சுவிட்சர்லாந்தின் உலகத்தரம் வாய்ந்த தொழிற்கல்வி மற்றும் பயிற்சி முறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள நவீன தொழிற்பயிற்சித் தொழில்நுட்பங்கள் மற்றும் அந்த முறைகளை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் பயிற்சித் துறையில் அறிவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் இலங்கையின் மனிதவள மேம்பாட்டுக்குச் சுவிட்சர்லாந்து வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு மற்றும் இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.