உலகுக்கு விடை கொடுத்த ராஜா வீட்டுக் குயில் : இலங்கை வைத்தியசாலையில் பிரிந்த உயிர் - சோகத்தில் இரசிகர்கள்
“ஒளியிலே தெரிவது தேவதையா.....” இந்த பெண் குரலுக்கு மயங்காத ஆட்கள் இல்லை!! கேட்பவரை சட்டென ஈர்க்கும் ஒரு வசீகரம் அந்த குரலுக்கு. ஆனால் அந்த வசீகரம் இனி ஒரு இசை பாடாது..
ஆம், இந்த வசீகர குரலுக்கு உரித்துடைய பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரணி தனது 47ஆவது வயதில் இலங்கையில் இன்று காலமானார்.
உடல் நலக் குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது உயிர் இந்த மன்னுலகை விட்டு இன்று பிரிந்தது.
சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
தனி இரசிகர் பட்டாளம்
இசை குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது தந்தையும், தமயன்களும் இசையமைப்பாளர்கள் என்றாலும் தனது தனித் திறமையாலேயே தனக்கொரு மிகப் பெரிய இசை இரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் பவதாரணி.
இவர் வித்தியாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும் என்பதே அவரது தனி பலம் எனலாம்.
1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி இசைஞானியின் இசைக்குடும்பத்தில் வந்து உதித்த இசை இளவரசிதான் இவர். 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார்.
இவர் அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, டைம், பிரண்ட்ஸ், தாமிரபரணி, கோவா, மங்காத்தா உள்பட 23 படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மலையாளத்திலும் பவதாரணி சில பாடல்களை பாடியுள்ளார்.
அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறப்பான பல பாடல்களை பாடியுள்ளார்.
பாடகியாக மாத்திரம் அல்லாமல் இசையமைப்பாளராகவும், பல்வேறு மொழிகளில் தனது கால் தடத்தைப் பதித்துள்ளார். தனது தந்தை இசைஞானி இளையராஜா மற்றும் தனது சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் இசையிலும் ஏனைய இசையமைப்பாளர்கள் பலரது இசையிலும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
கேட்பதற்கு மிகவும் இனிமையான பாடல்களை எமக்குத் தந்த இவரின் ஜீவன் இனி அந்த பாடல்களில் கலந்திருக்கும். குறிப்பாக, “மயில்போல பொண்ணு ஒண்ணு ...”, “ஒளியிலே தெரிவது தேவதையா..”, “ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி..” ”காற்றில் வரும் கீதமே..”, “தாலியே தேவை இல்ல..” என்று அவரது குரலினால் உயிர் பெற்ற பாடல்கள் இங்கு பல..
மேலும், இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
பின்னணி பாடகியாக மட்டும் இன்றி 10இற்கும் மேற்பட்ட படங்களில் பவதாரணி இசைமையத்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது அடுத்தடுத்த 3 படங்களுக்கு அவர் இசையமைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியில், சிகிச்சைக்காக இலங்கைக்கு வந்த இசையின் மகள் தாய்நாடு திரும்பாமல் கண் மூடினாள்...!!
இந்நிலையில், அவரது மரணம் தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் உலகெங்கும் பரந்து வாழும் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெகு சீக்கிரத்தில் இசை உலகுக்கு விடை கொடுத்துச் சென்ற பவதாரணியின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துவிட்டது..
இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள பிரமாண்டமான இசை நிகழ்ச்சிக்காக கொழும்பு வருகைத் தந்துள்ள இசைஞானி இளையராஜாவும், பவதாரணி சிகிச்சைப் பலனின்றி காலமான கொழும்பு தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
இதேவேளை, பவதாரணியின் சகோதரர்களான யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |