சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
புதிய இணைப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள இசைஞானி இளையராஜாவின் வீட்டுக்கு பாடகி பவதாரணியின் உடல் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பெருமளவான திரைப் பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் என பலர் ஒன்று திரண்டுள்ளனர்.
அத்துடன், பொலிஸ் பாதுகாப்பும் அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரிணியின் உடல்
நான்காம் இணைப்பு
இலங்கையில் இருந்து விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பாடகி பவதாரணியின் உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பவதாரணியின் உடலைப் பெறுவதற்காக அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் காந்திருந்துள்ளனர்.
இதேவேளை, தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும், அங்கு கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திரைப் பிரபலங்களும் இளையராஜாவின் வீட்டில் ஒன்று திரண்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்த பாடகி பவதாரணியின் உடல் தற்போது(26.01.202) கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம்(25) மாலை திடீரென உயிரிழந்தார்.
இதேவேளை, இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலையில் வைக்கப்பட்டிருந்தது.
மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் இன்று காலை கொழும்பு நோக்கி வருகைத் தந்திருந்தனர்.
இந்தநிலையில், பாடகி பவதாரணியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ள நிலையில் தற்போது அவரது சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
தமிழ் திரையுலக இசைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி இன்று(25) கொழும்பில் காலமானார்.
இந்நிலையில் அவரது உடல் லங்கா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மலர்சாலைக்கு எடுத்து செல்லப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், அவரது உடல் இன்று காலை இந்தியாவிற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் இலங்கையில் வைத்து இன்று மாலை காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.
கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும், இதன் காரணமாக அவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்துள்ள நிலையில், நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தற்போது கொழும்பில் தங்கியிருக்கும் இசைஞானி இளையராஜா, அவரது மகள் பவதாரணி காலமான தனியார் வைத்தியசாலையை நோக்கி விரைந்துள்ளார்.
இதேவேளை, இசைஞானி இளையராஜாவின் விசேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொழும்பில் நடைபெறவிருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியினுடைய ஏற்பாட்டாளரான பாஸ்கரனுடன் எமது செய்திப் பிரிவானது தொடர்பு கொண்டு கேட்ட போது அது தொடர்பான தகவல்கள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பவதாரணியின் உடலானது கொழும்பில் அமைந்துள்ள ஜயரத்ன மலர்சாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |