ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கில் பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் எடுத்த தீர்மானம்
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நாடாளுமன்ற விசாரணையில் சாட்சியமளிக்க அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜெப்ரி எப்ஸ்டீனின் பாலியல் முறைகேடுகள் மற்றும் அவருக்கு அரசுத் தரப்பில் இருந்த தொடர்புகள் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழு (House Oversight Committee) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில் ஆஜராகுமாறு கிளிண்டன் தம்பதிக்கு பலமுறை அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் ஆஜராக மறுத்து வந்ததால், அவர்களை "நாடாளுமன்ற அவமதிப்பு" (Contempt of Congress) குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்க குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டனர்.
இதற்கான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், தற்போது கிளிண்டன் தம்பதி இறங்கி வந்துள்ளனர். 1983-ல் ஜெரால்ட் ஃபோர்டு சாட்சியமளித்த பிறகு, ஒரு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராவது இதுவே முதல்முறையாகும்.
வாக்குமூலங்கள்
இந்த விசாரணையை முழுமையாகப் படம்பிடிக்கவும் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யவும் குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு நேரக்கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

கிளிண்டனின் செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் யுரேனா கூறுகையில், "நாங்கள் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஏற்கனவே வழங்கிய சத்தியப் பிரமாண வாக்குமூலங்களில் எப்ஸ்டீன் பற்றி தங்களுக்குத் தெரிந்த குறைந்தபட்ச தகவல்களை அவர்கள் தெரிவித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.
எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானப் பதிவுகளின்படி, 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் பில் கிளிண்டன் அந்த விமானத்தில் நான்கு முறை சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
மேலும், எப்ஸ்டீனின் பண்ணை வீட்டில் கிளிண்டன் குளிப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கோப்புகளில் இடம் பெற்றிருந்தன.
இருப்பினும், கிளிண்டன் தம்பதி எப்ஸ்டீனின் குற்றச்செயல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், இருபது ஆண்டுகளுக்கு முன்பே அவருடனான தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர்.
குடியரசுக் கட்சித் தலைவர் ஜேம்ஸ் கோமர் தலைமையிலான இந்தக் குழு, கிளிண்டன் தம்பதியிடம் எப்ஸ்டீனுடனான நட்பு மற்றும் அவர்களது அறக்கட்டளைக்கு எப்ஸ்டீன் வழங்கிய உதவிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 9 மணி நேரம் முன்
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் Cineulagam
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam