ஐஸ் இரசாயனங்கள் சிக்கிய விவகாரம்: பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
மித்தெனியவில் காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரியை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரி நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசேட சுற்றிவளைப்பு
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 5 பேர் அடங்கிய பாதாள உலகக் கும்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலகக் கும்பல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயனங்கள்
இதன்போது “கெஹெல்பத்தார பத்மே” வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரியின் சகோதரர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



